ரூஹா செய்தி மடல் – Ruah News Letter – Feb., 2019


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு,உயிர்ப்பிக்கிற ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். காலங்கள் மாறினாலும், உறவுகள் மாறினாலும் நேற்றும், இன்றும் என்றுமே மாறாத நேசராகிய இயேசுகிறிஸ்து, சதாகாலங்களிலும் உங்களோடே இருப்பார். இவ்வாண்டின் தீர்க்கதரிசன வார்த்தையாக, “என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள்…” – எசேக்கியேல் 37:14 என்ற வார்த்தையின்படியும், இம்மாத வாக்குத்தமான “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்” 1 கொரிந்தியர் 13:10 என்ற வாக்குத்தத்தின்படியேயும் உங்கள் வாழ்வில், குடும்பத்தில், வியாபாரத்தில், மரித்த யாவும் உயிரோடு எழும்பப் போகிறது மட்டுமல்லாமல் நிறைவான. ஆசீர்வாதத்தினால் நிறைந்திருப்பீர்கள் என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆசீர்வதிக்கிறேன்.

எக்காளப் பண்டிகை

இதோ! சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்ன நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிற இந்நாட்களில், கர்த்தருடைய வருகைக்கு முன் இந்திய தேசமெங்கும் எழுப்புதல் பற்றியெறியவும், கடைசி எக்காளச் சத்தத்திற்கு முன்பாக வரப்போகிற இயேசு ராஜாவை சந்திக்க ஆயத்தப்படுத்தும் எச்சரிப்பின் சத்தத்தை தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் தொனிக்கச்செய்து, துதித்து, ஜெபித்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தையும், கர்த்தர் தரும் தீர்க்க தரிசன வார்த்தைகளையும் பிரகடனப்படுத்தவுமே இந்த எக்காளப்பண்டிகை. மேலும், பட்டணங்கள் பாதுக்காக்கப்படவும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஜாமக்காரர்களை எழுப்பவும், ஒரு சேனையாய் 100 நாட்கள் (கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை) எக்காளப்பண்டிகையை ஆசரிக்க கடந்து சென்றுள்ளோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபை பாகுபாடின்றி அனைத்து திருச்சபை தலைவர்களும், போதகர்களும் இணைந்து இக்கூட்டங்களை நடத்த கர்த்தர் பெருந்தயை பாராட்டியுள்ளார்.

Ekkala Pandigai

கடந்த ஜனவரி 20ம் தேதி பாண்டிச்சேரியில் எக்காளப் பண்டிகைக் கூட்டத்தை மகிமையாய் ஆரம்பிக்க கிருபை செய்தார். ஜனவரி 21ம் தேதி கடலூரிலும், 22ம் தேதி உளூந்தூர் பேட்டையிலும், 23ம் தேதி மன்னார்குடியிலும், 24ம் தேதி தரங்கம்பாடியிலும், 25ம் தேதி கும்பகோணத்திலும், 26ம் தேதி புதுக்கோட்டையிலும், 27ம் தேதி நாகப்பட்டிணத்திலும் நடத்தியுள்ளோம்.

சென்ற இடத்திலெல்லாம் மக்கள் தேசத்திற்காக திரளாய் எழும்பி ஜெபித்தார்கள். மிகுந்த ஆசீர்வாதம் பெற்றார்கள். அந்தந்த பகுதியின் போதகர்களும், அனைத்து திருச்சபை தலைவர்களும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அவர்களை நன்றியோடு நினைக்கிறோம். ஏப்ரல் 29ம் தேதி வரை தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும், இந்தியாவின் மாநில தலைநகரங்களுக்கும், சென்று ஏக்காளப் பண்டிகை கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

நீங்களும் எங்களோடு இணைந்து இத்தரிசனத்தின் மூலமாக தேவசித்தத்தை நிறைவேற்றிட இந்த 100 நாட்கள் எக்காளப் பண்டிகைக்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். உங்களால், எங்களோடு பயணிக்க இயலாவிட்டாலும், விலையேறப் பெற்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை நெடுந்தொனியாய் தேசத்தில் முழங்கிட எங்களை அனுப்புங்கள். இவ்வெழுப்புதல் அறுவடைக்காய் உங்கள் மனபூர்வமான காணிக்கைகளினால் தாங்குங்கள். திரளான அறுவடையில் பங்குபெறுங்கள்.

ரூஹா துதி ஜெப கோபுரத்தின் அடுத்த பரிமாணம்

தேவன் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல நன்மையான காரியங்களை நமது ரூஹா ஊழியங்களுக்கு செய்துக்கொண்டிருக்கிறார். நம்முடைய ஞாயிறு ஆராதனைகள் ஒவ்வொரு வாரமும் அரும்பாக்கத்திலுள்ள விஜய் பார்க் ஹோட்டலில் வைத்து நடத்திக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு வாரமும் வாடகை செலுத்துவதற்கும், மீடியா பொருட்களை ஏற்றி, இறக்குவதிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளானோம். ரூஹா ஊழியத்தின் அனைத்து காரியங்களும் ஒரே கூரையின் கீழ் வரும்படி கர்த்தர் நமக்கு ஒரு வாசலை திறந்திருக்கிறார். பணச்செலவை குறைக்கும்படி வடபழனி 100 அடி சாலையில் நான்கு தளமுள்ள கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம். தேவன் 24/7 துதி ஜெப கோபுரத்தை கிருபையாய் கொடுத்திருக்கிறார். இப்பொழுது தற்காலிகமாக, இடம் சிறியதாயிருந்தாலும், அலுவலகத்திற்குள்ளேயே ஞாயிறு ஆராதனைகளை 5 ஆராதனையாக நடத்திக்கொண்டு வருகிறோம். ஒரே இடத்தில் எல்லா ஊழியங்களும் நடைபெறுவதால். சிரமங்கள் குறைந்திருந்திருக்கிறது. கர்த்தர் சீக்கிரத்தில் அநேக ஆத்துமாக்கள் வந்து தேவனை ஆராதிக்க நமது ஊழியத்திற்கென்று சொந்த இடத்தை கொடுக்கும்படியாகவும் பாரத்தோடு ஜெபித்துக்கொள்ளுங்கள்.
மட்டுமல்லாது நமது ரூஹா துதி ஜெப கோபுரத்தில் தொலைக்காட்சி ஊழியங்கள், ரூஹா சுவாசக் காற்று மாதாந்திர பத்திரிக்கை, On-line Ministries, 24 மணிநேரமும் ஆராதிக்கிற துதி ஜெபமையம், சபை ஊழியங்கள் மற்றும் இதர அலுவலகத்தின் வேலைகளை செய்யபும், தனிப்பட்ட மற்றும் விடுதலைக்காக ஜெபிக்கவருகிறவர்களுக்கு ஜெபம், counselling அறைகளும், அமைக்கபட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மணிவேளையிலானாலும் ஜெபிக்க, தேவனை ஆராதிக்க வரலாம். 24 மணி நேரமும் நம் ஜெப மையம் திறந்திருக்கும். நாம் சொந்த இடத்திற்கு செல்லும்வரை தேவனை விடுதலையோடு ஆராதிக்க கர்த்தர் கொடுத்த இந்த மகிமையான ஈவிற்க்காய் அவருக்கு கோடி நன்றிகளைச் செலுத்துகிறேன்.

ஃப்ரீடம் வெள்ளிவிழா

கர்த்தருடைய ஆவி எங்கு உண்டோ அங்கு விடுதலை உண்டு. கர்த்தர் நம் ஊழியத்திற்கு தந்த, மாபெரும் தரிசனமான ஃபீரிடம் இதுவரை பல பட்டணங்களிலும், தேசங்களிலும் பயணித்து, தேவன் தரும் விடுதலையை ஜனங்களுக்கு கொடுத்து வருகிறது. 2007ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஆண்டு வரை 24 ஃப்ரீடம் பெருவிழாக்களை இந்தியாவிலும் மற்றும் வெளி தேசங்களிலும் நடத்த கர்த்தர் பாராட்டின கிருபைக்காக ஸ்தோத்தரிக்கிறேன்.

ரூஹா ஊழியத்தின் முதுகெலும்பாய் இருக்கிற ஃப்ரீடம் தரிசனப் பெருவிழா வெள்ளிவிழாவாக இம்மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் இந்தியாவின் “0” பாயிண்ட் என்று அழைக்கப்படும் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாக்பூரில் நடத்தவுள்ளோம். இப்பெருவிழாக்களின் மூலமாய் இரட்சிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்காய், நான் கர்த்தரைத் துதிக்கிறேன். இதற்கு மூலக்காரணமாய் இருந்தது ஃப்ரீடம் தரிசனப் பங்காளர்களாகிய நீங்களே. இத்தரிசனத்தின் பாரத்தை நன்கு உணர்ந்த நீங்கள் இதற்காக தோள்கொடுக்கமுடியும். உங்களின் இடைவிடாத ஜெபங்களும், உண்மையான காணிக்கைகளும் கணக்கற்ற ஆத்துமாக்களை அறுவடையாய் தந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இவ்வூழியத்தை தாங்கி, இந்த பெரிய தரிசனத்தில் கரம் கோர்த்து நடக்க கிருபை பாராட்டின உங்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்களுக்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். சென்னையிலிருந்து ஒரு சேனையாய் நாங்கள் வட இந்தியாவிற்கு சென்று 25வது ஃப்ரீடம் பெருவிழாவினை நடத்த இருக்கிறோம். வருகிற ஒவ்வொரு ஆத்துமாக்களும் கர்த்தருடைய அபிஷேகத்தையும், சுகத்தையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஜெபித்துக் கொள்ளுங்கள்.

ரூஹா ஊழியங்களின் 13 ஆண்டு நிறைவு

கர்த்தருடைய வல்லமையுள்ள புயமும், அவருடைய பாராக்கிரமமுள்ள கரமும் இம்மட்டும் நம் ரூஹா ஊழியங்களோடு இருந்து, மகத்தான காரியங்களை செய்ததற்காக தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை செலுத்துகிறேன். எங்கள் தாழ்வில் எங்களை நினைத்தருளி, எண்ணற்ற ஊழியங்கள் மூலமாய் ஆத்துமாக்களை சந்தித்துக்கொண்டிருக்கிற தேவ அன்பிற்காய் தேவனை மனதார துதிக்கிறேன். 12 ஆண்டுகள் வேதாகமத்தின் அடிப்படையில் நிறைவின் அடையாளமாய் இருக்கிறது. 13 என்பது புதிய துவக்கத்தின் அடையாளமாகும். கானானை நோக்கி தரிசனமாக சென்றுக்கொண்டிருந்த பாதையில் தடையாய் நின்ற எரிகோ தகர்த்தெரிவதற்காக தேவனுடைய வழிநடத்துதலின்படி (6 நாள் 6 முறையும் 7வது நாள் 6 முறையும் ஆக 12 முறை அமைதியாக சுற்றிவந்தனர் 13வது முறை மகாபெரிய ஆர்ப்பரிப்போடும், துதியோடும், எக்காளச்சத்தத்தோடும் சுற்றிவரும் போது எரிகோ மதில்கள் தகர்க்கப்பட்டு மாபெரும் ஜெயத்தை எடுத்தார்கள். அது போல நமது ரூஹா ஊழியத்தின் 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்மையும் தேசத்திலுள்ள எரிகோ மதில்களையெல்லாம் தகர்க்கும்படியாக எக்காளச் சத்தத்தோடும் துதியோடும் இந்தியா தேசம் எங்கும் செல்லும்படியாக கர்த்தர் கிருபையளித்திருக்கிறார். இதுவரை ரூஹா ஊழியங்களுக்காய் உங்கள் பாரம் நிறைந்த ஜெபத்தோடும், காணிக்கைகளினாலும் தாங்கிய உங்களை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

உங்கள் அன்பு சகோதரன்

போதகர் ஆல்வின் தாமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *