வாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

இந்த மாதம் கர்த்தர் கொடுத்த விசேஷித்த தீர்க்கதரிசன வார்த்தையை உங்களுக்கு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஜெபத்துடன் கருத்தாய் வாசித்து, வாக்குத்தத்த வசனங்களை அறிக்கையிட்டு சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம். (1 கொரிந்தியர் 13:10)

உலகமானது தள்ளப்பட்ட தூதர்களால் ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் யாரும் நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறைக்குள் இருந்தது. அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆறு நாட்களில் தம் வார்த்தையால் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, இந்த பூமியை நிறைவுள்ளதாய் மாற்றினார். உங்களுடைய வாழ்க்கையிலும் காணப்படுகிற குறைவை, வெறுமைகளை மாற்றி, நிறைவைக் கட்டளையிடப்போகிறார். எந்தப் பகுதியிலே நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்களோ, அந்தபகுதியிலே நிறைவைக் காணப்போகிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய தேவைகளை அவர் சந்திக்க போகிறார். உங்கள் அறிவுக்கு எட்டாத அதிசயமான காரியங்களைச் செய்து, தம்முடைய நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்தப்போகிறார். இது எப்படியாகும்? யாராலும் நிரப்பமுடியாத குறைவு என் வாழ்க்கையில் காணப்படுகிறது என்று ஒருவேளை நீங்கள் புலம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது, அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் (எபேசியர் 1:23) மனிதனால் ஒரு பகுதியை மட்டும்தான் நிரப்ப முடியும். ஒரு பகுதியில்தான் உங்களை திருப்தி செய்ய முடியும். ஏதாவது ஒரு காரியத்தை தான் நிறைவேற்ற முடியும். ஆனால் தேவன், எல்லாகுறைவுகளையும் எல்லா விதங்களிலும் நிறைவாக்கமுடியும். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர். அவர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார்.

நிறைவுள்ள திரித்துவ தேவன்

திரியேக தேவன் நிறைவுள்ளவர். அவரிடத்தில் ஒரு சிறு விஷயத்தில் கூட குறைவு என்பதே கிடையாது-. ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற பிதாவாகிய தேவன், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர். அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. குமாரனாகிய கிறிஸ்து, பரிபூரணர். அவரிடத்தில் கடுகளவேனும் குறையை கண்டுபிடிக்க இயலாது. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும் அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (கொலொசேயர் 1:16) மேலும் பரிசுத்த ஆவியானவர் தன்னில்தான் நிறைவுள்ளவர். ஆவி ஊற்றப்படும் போது, வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாக மாறும். ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிற குறைகளை மாற்றி, நிறையப்பண்ணுகிறவர். இப்படிப்பட்ட திரியேக தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் எனக்கும் குறைவு என்பதே கிடையாது. நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகளை உங்களுக்கு செய்யப்போகிறார். ஒளி வரும்போது எப்படி தானாகவே இருள் விலகி விடுகிறதோ, அதுபோல நிறைவானவர் உங்களுக்குள் வரும்போது, எல்லாக்குறைவுகளும் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிவிடும். நம்முடைய தேவன் அவாந்திரவெளியை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். ஆகவே எதைக்குறித்தும் சோர்ந்துபோகாமல், கர்த்தர் மேல் விசுவாமுள்ளவர் களாயிருங்கள். உங்கள் குறைவுகள் மாறப்போகிறது.

கீழ்ப்படிகிறவர்களின் நிறைவு

இயேசு கிறிஸ்து கெனேசரத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார், மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக்கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப்போதகம்பண்ணினார் (லூக்கா 5:1-3)

இரவு முழுவதும் முயற்சி செய்தும் ஒரு மீன் கூட கிடைக்காமல் வந்த சீமோனுடைய படகில் ஏறி, இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார். தோல்வியின் உச்சக்கட்டத்தில் இருந்த சீமோனை நோக்கி, கொஞ்சம் ஆழத்திற்கு கொண்டு சென்று வலைகளைப்போடுங்கள் என்றார். ஒரு மீன் கூட கிடைக்காததால் வலைகளில் ஏதேனும் ஓட்டை, பிரச்சனை இருக்குமோ என்று பழுதுபார்த்துக் கொண்டிருந்த சீமோனிடம் மீண்டும் வலையை போடு என்று சொன்னபோது, கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்ப்படிந்து, வலையைப்போட்டார்.

அன்பானவர்களே,

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் என்பது சற்று கடினம்தான். அவருடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ள முடியாததுதான். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே, சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருடைய அறிவு எனக்கு எட்டாத உயரமும், மிகுந்த ஆச்சரியமு மாயிருக்கிறது என்று வர்ணிக்கிறார். வாழ்க்கையில் குறைவையே கண்ட சீமோன், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, வலையை போட்டவுடன், வேதம் சொல்லுகிறது, வலை கிழிந்து போகத்தக்கதான மீன்களைப் பிடித்தார்கள் என்று. இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிவதற்குமுன் ஒரு மீன்கூட இல்லை. ஆனால் எப்பொழுது வார்த்தைக்கு கீழ்படிந்தாரோ அப்பொழுது எல்லா குறைவுகளையும் மாற்றி, அதிகமான நிறைவை கட்டளையிட்டார். அதுமட்டுமல்லாமல், மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். பாருங்கள், என்ன ஒரு ஆச்சரியம்! கீழ்படிதலினால் எவ்வளவு பெரிய நிறைவு, ஆசீர்வாதம்.

அன்பானவர்களே,

நீங்களும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறீர்களா? சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன? ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்படிந்தவுடன் நிறைவான ஆசீர்வாதம்.

கீழ்படிந்த சீமோனுக்கு மட்டும் ஆசீர்வாதம் அல்ல… கூட இருந்த மற்ற மீனவர்களுக்கும் ஆசீர்வாதம். ஆம், நீங்கள் கீழ்படியும்போது, உங்களுக்கு மாத்திரம் நிறைவு அல்ல. உங்கள் மூலமாய் உங்கள் கம்பெனிக்கும், குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நிறைவு. அது எதனால் ஏற்படும்-? நீங்கள் கர்த்தருக்குக் கீழ்படிதல் மூலமாய் உண்டாகப்போகிறது.

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு நிறைவு

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்கீதம் 34:10)

கர்த்தரைத் தேடுகிறவர்களின் வாழ்க்கையில் குறைவு என்பதே கிடையாது. ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தேடுகிறீர்களா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் குட்டிகள் கூட பட்டினியாயிருக்கும். ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டு, அவரையே சார்ந்திருக்கிறவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் நிறைவுதான். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் (மத்தேயு6:33) ஆம், நீங்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தருடைய முகத்தை தேடுவீர்களானால், உடுத்துவதற்கு, உண்பதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.

கானாவூரில் நடைபெற்ற கலியாண விருந்திற்கு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது, கலியாண வீட்டுக்காரர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது இயேசுகிறிஸ்துவை அணுகிய போது, அவர் ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். அவர்களும் நிரப்பினர். பின்னர் அவற்றை எடுத்து பரிமாறினபோது, முந்தைய திராட்சை இரசத்தை விட இந்த திராட்சை ரசம் மிகவும் ருசியுள்ளதாயிருக்கிறது என்று மெச்சிக்கொண்டனர். ஆம், கலியாண வீடுகளில் உணவுகள் குறைவுபட்டால் கலியாண வீட்டுக்காரர்களுக்கு மிகவும் அவமானத்தைத் தரும். ஆனால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை நாடினபோது, அந்தக்குறைவை நிறைவாய் மாற்றி, அந்த வீட்டாருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தினார்.

உலகின் முதல் குடும்பத்தை பிசாசானவன் வஞ்சித்து ஏமாற்றி அவர்களின் நிறைவுகளையெல்லாம் பறித்துக்கொண்டான். ஆனால் புதிய குடும்பமாகப்போகிற இந்த திருமண நாளில் எந்த ஒரு குறைவும் வரக்கூடாது என்பதற்காக தேவன் தமது முதலாவது அற்புதத்தை செய்தார். பிரியமானவர்களே, என் வாழ்க்கை மாரா போல் கசப்பாயிருக்கிறது. என் குடும்பத்தில் நிறைவு காணப்படவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களுக்கு நிறைவான ஆவியானவர் எல்லா குறைவுகளையும் மாற்றுவார். மண்ணான கற்சாடியில் தண்ணீரை ஊற்றியதும் அது திராட்சை ரசமாக மாறினது போல, மண்ணான மனிதனாகிய உங்கள்மேல் ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, உங்கள் குறைவுகளெல்லாம் நிறைவாக மாற்றப்படும்.
ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுவது மிக அவசியம். இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்து பரமேறுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களை நோக்கி, உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்றார். இந்த தேற்றரவாளன் எப்பொழுதும் உங்களோடிருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நிறைவுதான்.

விடாய்த்த ஆத்துமாவிற்கு நிறைவு

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். (எரேமியா 31:25)
நம்முடைய தேவன். ஆத்துமாவின்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். ஆம், வருத்தத்தோடு வியாகுலத்தோடு இருப்பவர்களின் ஆத்துமாக்களை ஆனந்தத்தால் நிரப்புகிறார். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் என்று இயேசுகிறிஸ்துவைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். ஆம், துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தால் நிறையப்பண்ணுகிறார். அவர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 34:18) மேலும் இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி, அவர்களுடைய காயங்களை கட்டுகிறார் (சங்கீதம் 147:3). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்; உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசாயா 57:15) என்று தேவனாகிய கர்த்தர் விடாய்த்த ஆத்துமாவை தேற்றுகிறார்.
குடும்பத்தில் அன்பு கிடைக்கவில்லை, எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள், கடந்த காலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்று புலம்புகிறீர்களா? வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா? வியாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலைப்படத் தேவையேயில்லை. காரணம் நிறைவானவர் உங்களுக்குள் இருக்கிறார். எல்லா குறைவுகளும் உங்களை விட்டு ஓடிவிடும். தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையால் உங்களை மகிழ்ச்சியாக்குவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *