தீர்க்கத்தரிசனச் செய்தி – மேற்கொள்ளும் அதிகாரம் – போதகர் ஆல்வின் தாமஸ்

 

அன்புக்குரியவர்களே,

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் நிறைந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன். இந்த அக்டோபர் மாதம் கர்த்தர் உங்கள் கையில் கொடுத்த அதிகாரத்தை செயல்படுத்தப் போகிறீர்கள். நீங்கள் ஆளப்போகிறீர்கள். ஆம், எல்லாவற்றையும் மேற்கொள்ளப்போகிறீர்கள். உங்களுக்கு எதிராக எழும்புகிற சூழ்நிலைகளை எளிதாக சமாளிக்கப்போகிறீர்கள். நானா எதிர்கொள்ள போகிறேன் என்று கேள்வியோடு இதை வாசித்துக் கொண்டிருக் கிறீர்கள். நல்லது தொடர்ந்து ஜெபத்துடனும் விசுவாசத்துடனும் படியுங்கள். இதில் வருகிற விசுவாச வார்த்தைகளை அறிக்கையிடுங்கள். நிச்சயம் உங்கள் மனம் புதிதாகி மறுரூபமாவீர்கள்.

நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து, சீஷர்களைப்பார்த்து, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன் (லூக்கா 10:18,19) என்றார்.

மனிதனுக்கும், சத்துருவாகிய சாத்தானுக்கும் இடையில் உள்ள யுத்தமானது இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையான ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈடுபடுத்தப்படுகிறோம். ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறந்தவுடனேயே சாத்தானோடு உள்ள ஆவிக்குரிய போராட்டம் துவங்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனுடைய எதிர்க்காலத்தையும் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீராத ஆசை கொண்டவனாய் காணப்படுகிறான். சாத்தானின் எல்லைக்குள் சென்று அவனைத் தாக்கி, அந்த எல்லைகளை தேவனுடையவைகளாக்கும் அதிகாரத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறபடியால், நம்மை ஆவிக்குரிய விதத்தில் செயல் இழக்கப்பண்ண சகல திட்டங்களையும் வகுக்கிறான். இப்படி கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோவென்று வகைதேடி சுற்றி வருகிற சத்துருவின் கிரியைகளை மேற்கொள்ள கர்த்தர் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். மேலும் எதிரியுடன் உள்ள ஆவிக்குரிய போராட்டத்தில் உங்களை தற்காப்பது மாத்திரமல்ல, அவனது எல்லைக்குள் சென்று அவன் மீது தாக்குதல் நடத்தி சிறைபட்டவர்களை மீட்டு, விடுதலையாக்கி, அவனது எல்லைகள் யாவையும் தேவனுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவே தேவன் உங்களை அதிகாரப்படுத்தி பொறுப்புள்ளவர்களாக்கி யிருக்கிறார்.

 திரும்ப பெறப்பட்ட அதிகாரம்

சர்வ வல்லமையுள்ள தேவன், தம் வார்த்தையினால் உலகத்தை சிருஷ்டித்து, பின்பு மனிதனை உருவாக்கிய பின்பு, எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தி ஆண்டு கொள்ளுங்கள் (ஆதியாகமம் 1:28) என்று அவர்களுக்கு சர்வத்தின்மேலும் அதிகாரத்தைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து போனதினால் அந்த அதிகாரம் மனிதனிடமிருந்து பறிக்கப்பட்டு, பிசாசின் கைக்கு சென்றுவிட்டது.

மனிதன் தன்னுடைய அதிகாரத்தை சாத்தானுக்கு அடகு வைத்துவிட்டான். இதனால் சாத்தான் உலகத்தின் அதிபதியானான் (2 கொரிந்தியர் 4:4) ஆகவே உலகத்தின் சகல ராஜ்யங்களின் மேலுமுள்ள அதிகாரமும் மகிமையும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி, கிறிஸ்துவுக்கே சவால்விட்டான் (லூக்கா 4:5) இந்த அதிகாரத்தை மீண்டும் மனிதனுக்கு தருவதற்காகவே, இயேசு மானிடரானார். இயேசுகிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் மூலமும், தனது உயிர்தெழுதலின் மூலமும் எதிரியாகிய சாத்தானை தோற்கடித்தார்.

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங் களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளினமேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார் (கொலோசெயர் 2:14,15)

இப்பொழுது பிசாசிடம் எந்த அதிகாரமும் இல்லை. ஒரு தேவ மனிதன் அவன் பல்பிடுங்கப்பட்ட பாம்பு என்று கூறுகிறார். ஆம், அவனால் ஒன்றும் செய்யமுடியாது. சிலுவையில் இயேசு தம்முடைய ஜீவனை விலைக் கிரயமாக செலுத்தி, அதிகாரத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழித்தார். (எபிரேயர் 2:14) பிசாசானவன் தோற்றுப்போனவன். அவன் உங்களை மேற்கொள்ள முடியாது.

ஒரு வேளை நான் சாத்தானுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையே எனக்கு பழகிவிட்டது. எனக்கு அவன் மீது அதிகாரம் செலுத்த திராணியில்லை. ஆகவே நான் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்து விடுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை தூக்கி எறியுங்கள். நீங்கள் சத்துருவின் மேல் அதிகாரம் செலுத்த அழைக்கப்பட்டவர்கள். மேற்கொள்ளும் அதிகாரம் உங்கள் சொத்து.

நீங்கள் தேவனுடைய பிள்ளை

அரசியலில் எந்த கட்சி அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறதோ, அதுவே அரசாட்சி நடத்துவதற்கான அதிகாரத்தை பெறுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவுகளை எல்லோரும் பின்பற்றுவார்கள். உதாரணத்திற்காக, ஒரு நிறுவனத்தில் சாதாரண பணியாளாய் இருக்கிற ஒருவர், நாளை எல்லோருக்கும் விடுமுறை என்று அறிவித்தால் ஏற்றுக்கொள்ள தகுமோ? அதுவே நிறுவன மேலாளர் விடுமுறை என்று அறிவித்தால் அது செல்லுபடியாகும். தமிழக முதல்வர் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தால் மாத்திரமே விடுமுறையாகும். ஆம், உலகபிரகாரமாக அதிகாரத்திலிருக்கும் ஒருவரின் பேச்சே செல்லுபடியாகிறது. அதுபோலதான், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கர்த்தர் யாருக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறாரோ அவர்களின் வார்த்தைகளே செல்லுபடியாகும்.

ஆம், நீங்கள் தேவனுடைய பிள்ளை. ஆகவே அதிகாரமானது உங்கள் பிறப்புரிமை. பகையைச் சிலுவையின்£ல் கொன்று, அதினாலே தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி, அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நமக்கு கொடுத்திருக்கிறார். தம்முடைய இரத்தத்தால் கழுவி, உங்களை பிள்ளையாக மாற்றியிருக்கிறார். எனவே சட்டப்படி அவரது பிள்ளையாகிவிட்ட உங்களுக்கு அண்ட சராசரங்களின் மேலும் அதிகாரம் கொடுக்கப்பட்டாயிற்று. நீங்கள் கட்டவும், கட்டவிழ்க்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு (மத்தேயு 16:18) உங்களுக்கு சாத்தான் மீதும், பாவத்தின் மீதும், நோய்களின் மீதும், உலகத்தின் மீதும், இயற்கையின் மீதும் பரிபூரண அதிகாரம் உண்டு. அவைகளை உங்கள் அதிகாரத்திற்கு கீழ்படுத்தும்படி தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (ரோமர் 5:17)
அன்பானவர்களே, அரசாளுகின்ற தகப்பனின் உரிமையைப் பெற்ற ஆளுகிற பிள்ளைகள் நீங்கள். சர்வலோக ராஜாவின், ராஜாத்தி நீங்கள்தான். இயேசு தாம் பூமியில் வாழ்ந்த நாட்களில் பிசாசு, இயற்கை, வியாதிகள் எல்லாவற்றையும் தமது வார்த்தையின் வல்லமையினால் ஆளுகை செய்தார். இயேசுவோடு இணைக்கப்ட்ட நீங்களும் அவரைப்போலவே சகலத்தையும் உங்கள் வாயின் வார்த்தையால் அடக்க முடியும். நீங்கள் கர்த்தரின் சீயோன் நகரம். உங்களில் இருந்து தமது வல்லமையின் செங்கோலை அனுப்பி, அவர் தமது சத்துருக்களின் நடுவே ஆட்சி செய்கிறார் (சங்கீதம் 110:2)
எழும்புங்கள்! சத்துருக்களை உங்கள் வீட்டை விட்டும், நாட்டை விட்டும் விரட்டி அடியுங்கள். எல்லாவற்றையும் கீழ்படுத்துங்கள்.

நீங்கள் கிறிஸ்துவின் ஸ்நானாதிபதிகள்

நீங்கள் தேவனுடைய பிள்ளை என்ற அந்தஸ்து மட்டுமல்ல. கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகளாய் இந்த உலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனோடு ஆளுகிற உடன் ஆளுநர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உத்திரவாதிகளாயிருக்கிறீர்கள். இந்த உலகமானது பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஆத்துமாக்களுக்கும் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை பிரசங்கித்து, அவர்களை தேவ ராஜ்யத்திற்குரியவர்களாய் மாற்றும்படி கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்.
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள் (மத்தேயு 10:8) என்று ஜனங்களை விடுதலையாக்கும்படி அதிகாரம் கொடுத்திருக்கிறார். இந்த அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? வியாதி தீராதா? என்று கலங்கிக்கொண்டிருக்கிறவர்கள் ஏராளம். நீங்கள் கர்த்தர் கொடுத்த இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை கட்டி வைத்திருக்கிற கடன், வியாதி, சாபப்பிசாசை விரட்டுங்கள். உங்கள் மூலமாய் ஜெயம் உண்டாகட்டும்.

ஏனென்றால் வேதம் சொல்கிறது, பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் (மத்தேயு 16:19) ஆம், கர்த்தர் உங்களுக்கு கட்டுகிறதற்கும், கட்டவிழ்க்கிறதற்குமான அதிகாரத்தைக்கொடுத்திருக்கிறார். உங்கள் குடும்பத்தில், தெருவில், அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் வியாதியோடு, கடன்பிரச்சனையோடு இருக்கிறார்களா? அவர்களுக்காக அதிகாரமுள்ள இயேசுவின் நாமத்திலே ஜெபியுங்கள். நிச்சயமாய் விடுவிக்கப்படுவார்கள். கர்த்தருடைய நாமம் உங்கள் மூலமாய் மகிமைப்படும்.

நான் எப்படி மற்றவர்களுக்காக ஜெபிப்பேன். நான் ஜெபித்தால் வியாதிகள் குணமடையுமா? பிசாசுகள் ஓடுமா? என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக நீங்கள் ஜெபித்தால் வியாதிகள் குணமடையும், பிசாசுகள் அலறி ஓடும். ஏனென்றால் நீங்கள் முதலில் தேவனுடைய பிள்ளை. பின்பு நீங்கள் தேவனுடைய ஸ்தானாதிபதியாக இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தருடைய நாமத்தினால் அதட்டும்போது பிசாசுகள் கீழ்படியும். நான் தேவனுடைய பிள்ளை, கிறிஸ்துவின் ஸ்தானாதிபதி என்று வாயினால் அறிக்கையிடுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் திருப்பத்தூரில் வல்லமை முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒரு நாள் முகாமில் ஜெப வேளையின்போது, பயங்கரமான பிசாசு பிடித்தவன் ஆடிக்கொண்டு இருக்கிறான். நான்கு பேர் அவனை பிடிக்கிறார்கள். ஆனாலும் அவனுடைய ஆட்டம் நின்றபாடில்லை. நான் மேடைக்கு பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த முகாமை பராமரிக்கிற பொறுப்பாளர் என்னை பார்த்து, “அண்ணா.. இவனை அடக்க முடியவில்லை, நீங்கள் வந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று என்னை அழைத்தார். வலிய போய் புலி வாலை பிடிப்பது போல் இருந்தது. நான் அவர் கூப்பிட்டதற்காக பக்கத்தில் போய் நின்றேன். எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. பெரிய ஊழியர்கள் எல்லாம் நிற்கிறார்கள், என்னை ஏன் கூப்பிட்டீர்கள்? என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். பிறகு அந்நிய பாஷைகளை பேசி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் வெளியேறு என்று சொன்னேன். அவ்வளவு நேரமாக ஆடிக்கொண்டிருந்த அவன், உட்கார்ந்து விட்டான். அவனுக்குள் இருந்த அசுத்த ஆவி வெளியேறியது. அந்த நேரத்தில் தான் எனக்குள்ளும் தேவன் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் என்று உணர்ந்துகொண்டேன். அதன்பின்பு கர்த்தருடைய வல்லமையிலும் அவருடைய சத்துவத்திலும் பலப்பட்டு விடுதலை ஊழியத்தை செய்ய ஆரம்பித்தேன்.
அப்போஸ்தலர்களும், சீஷர்களும் கர்த்தர் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி, வியாதியஸ்தரை சொஸ்தமாக்கினார்கள், பிசாசின்பிடியிலிருந்த அநேகரை விடுதலையாக்கினார்கள். சாபக்கட்டுகளை அறுத்தார்கள். அநேகர் இவர்கள் மூலமாய் புதுவாழ்வை பெற்றார்கள். ஆம் அன்பானவர்களே, கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தை பயன்படுத்துங்கள்.
மேலும் அப்போஸ்தலனாகிய பவுல், இந்த அதிகாரத்தோடு தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்.

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபேசியர் 611,12)

இதற்காக ஏழு ஆயுதங்களை நீங்கள் எப்பொழுதும் அணிந்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தீங்கு நாளில் பிசாசுகளை முழு பலத்தோடு எதிர்க்க முடியும். வானமண்டலத்திலுள்ள ஆளுகைச் செய்யும் பலவானை ஒரு நாள் கட்டினப் பிறகு மறுபடியும் கட்டத் தேவையில்லையா என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொண்டு, பலவான்களை ஆவியானவரின் வழிநடத்துதலின்படி தினமும் கட்ட வேண்டும்.

தனது தேசமாகிய வட கொரியா பலவானைக் கட்டுவதற்கு ஆண்டு முழுவதும் (24 மணி நேரமும்) கட்டுதலை, கட்டவிழ்த்தலைச் செய்ய வேண்டியிருந்தது என்று பால்யாங்கி சோ கூறுகிறார். ஒரு வருடமல்ல, தொடர்ச்சியாய் பலவானின் மேல் அதிகாரம் செலுத்தி அவனைக் கட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். இன்றும் 24 மணி நேரமும் ஜெபத்திலே அதிகாரத்தை பயன்படுத்தி, கொரியா தேசத்து பலவானைக் கட்டப்பட்ட நிலையிலே வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, அன்பானவர்களே! உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை உணர்ந்து கொண்டு, இந்த உலகத்தில் ஒளிதரும் சுடர்களாய் பிரகாசியுங்கள். ஒன்றும் உங்களை சேதப்படுத்தமாட்டாது என்று வாக்குப்பண்ணிணவர் ஒரு தீங்கையும் உங்கள் வாழ்வில் அனுமதிப்பதில்லை. ஆவிக்குரிய போராயுதங்களை தரித்தவர்களாய், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்துக்கொண்டு, அதிகாரத்தோடு இயேசுவின் நாமத்தில் முழங்குங்கள். நிச்சயம் உங்களுக்கு எதிராக இருக்கிற பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ளுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *