வாக்குத்தத்தச் செய்தி – உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் – போதகர் ஆல்வின் தாமஸ்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் தேவனுடைய பிள்ளையாகவும், இந்த உலகத்தின் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகளாகவும் இருக்கிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு பிசாசின் சகல வல்லமையையும் மேற்கொள்கிறதற்கான அதிகாரத்தை வாக்குத்தத்தமாக கொடுத்திருந்தார். ஆகவே நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.

இந்த மாதம் கர்த்தர் உங்களை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று வாக்கு பண்ணுகிறார். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்:
செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 2:23)

பழங்காலத்தில் முத்திரை மோதிரமானது, ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியது. அரசர்களின் கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்திருந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகினாலோ அல்லது மிருதுவான களிமண் அழுத்தியோ அதன் அடையாளத்தை எடுத்து, தேசமெங்கும் செல்லுகிற அந்த சுற்றரிக்கை தாளில் முத்திரையாக வைப்பார். அதன்பிறகு அந்த சட்டத்தை யாரும் திருத்தவோ, நீக்கவோ இயலாது. ஆம் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட முத்திரை மோதிரம். நீங்கள் முடிவெடுக்கிற காரியத்தை யாராலும் மாற்ற முடியாது. உங்களை வெறும் அழகுக்காக மாத்திரமல்ல, மாறாக அநேக ஜனங்களை ஆசீர்வதிக்கிறதற்கு கர்த்தர் உங்களை ஒரு முத்திரையாக வைத்திருக்கிறார்.

பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான் (ஆதியாகமம் 41:42,43)

அடிமையாய் வாழ்ந்த யோசேப்பை, திடீரென்று ஆளப்போகிறவனாய் மாற்றிவிட்டார். பார்வோனின் கனவுக்கு அர்த்தத்தையும், செய்ய வேண்டிய காரியங்களையும் அறிவித்தபோது, பார்வோன் யோசேப்பு அதிகாரத்தை கொடுக்கும் விதமாக தன் கையிலுள்ள முத்திரை மோதிரத்தை கழற்றி, யோசேப்புக்கு அணிவித்தான். இதன்பின்பு எகிப்தின் முழு அதிகாரமும் யோசேப்பின் கைக்கு மாறியது. யோசேப்பின் உத்தரவில்லாமல் தன் கையையாவது காலையாவது ஒருவனும் அசைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட மேன்மையான முத்திரை மோதிரமாக கர்த்தர் உங்களை மாற்றப்போகிறார்.

பரிசுத்த ஆவியானவரின் முத்திரை

நீங்கள் சாலையில் நடக்கும்போது, அநேக காகிதத்துண்டுகள் சிதறிக்கிடப்பதை பார்த்திருப்பீர்கள். அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் நமது இந்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தால் அதை ஓடிப்போய் எடுத்துக்கொள்வதுண்டு. இரண்டுமே காகிதம்தான். ஆனால் அதில் அரசாங்கத்தின் முத்திரை போடப்பட்டிருப்பதால் அது விலைமதிப்புள்ளதாய் மாறிவிடுகிறது.

அதுபோல, நீங்கள் வெறும் காகிதம்தான். ஆனால் உங்களை பரிசுத்த ஆவியானர் முத்தரித்திருக்கிறார். ஆகவே நீங்கள் விலைமதிப்பு மிக்கவர்கள். எப்போது நீங்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்களோ.. அப்பொழுதே நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரைபோடப்பட்டீர்கள்.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைப்போடப் பட்டீர்கள். (எபேசியர் 1:13,14)

நீங்கள் உங்களுடையவர்களல்ல. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். ஏனென்றால் உங்கள் மீது முத்திரைபோட்டிருக்கிறார். ஒன்றுக்கு உதவாத உங்களையும் என்னையும், புது மனுஷனாய் மாற்றி, அவருடைய பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டது காரணம், நீங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இந்த உலகத்தில் இருப்பதற்காகவே.. ஆகவே அவர் உங்களுக்குள் இருந்து, அவர் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை உங்களைக் கொண்டு நிறைவேற்ற உங்களை இன்றே அர்பணியுங்கள்.

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே.. என்று அழைக்கப் பட்ட விழுந்து போன தூதனாகிய லூசிபர் நீ விசித்திரமாய்ச் செய்யப் பட்ட முத்திரை மோதிரம் என்று பாராட்டப்பட்டவன். ஆனால் அவன் பெற்ற முத்திரையை உடைத்துப் போட்டப்படியால் கீழே தள்ளப்பட்டான்.
நீங்களும் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பரிசுத்த ஆவியானவர் என்ற முத்திரையை எடுத்துப்போடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள். (எபேசியர் 4:30) பரிசுத்த ஆவியானவர் மிகவும் ஒழுங்கானவர். அவருக்கு பிரியமில்லாத காரியங்களை நீங்கள் செய்யும்போது, மிகவும் துக்கப்பட்டு, உங்களை விட்டு அமைதியாக விலகிவிடுவார். ஆகவே உங்கள் சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை உங்கள் பரிசுத்த வாழ்க்கை மூலமாக கனப்படுத்துங்கள்.

அன்பின் முத்திரை

கல்யாண வீடுகளில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரத்தை அணிந்துக்கொள்ளுவார்கள். காரணம் இது ஒரு அன்பிற்கு அடையாளமாய் இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்கள் மீது ஒரு அன்பின் முத்திரையை போட்டிருக்கிறார். இந்த அன்பின் முத்திரையை போட்டத்தின் நிமித்தம் நீங்கள் அவருடனே கூட சேர்ந்து ஆளுகிறவர்களாக மாறிவிட்டீர்கள்.

லூக்கா 15ம் அதிகாரத்தில், இளையக்குமாரன் தகப்பனிடத்திலிருந்து பிரிந்து போய், சொத்துகளையெல்லாம் அழித்து, ஊதாரித்தனமாக செலவழித்து, பின்பு உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை வந்தபோது, தகப்பனிடத்தில் திரும்பி வருகிறார். அவன் தூரத்தில் வரும்போதே தகப்பன் அவனைக் கண்டு, கழுத்தைக்கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டது மாத்திரமல்ல.. அதற்கு மேலான ஒரு காரியத்தை செய்கிறார். அப்பொழுது தகப்பன் தன் ஊழிக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். (லூக்கா 15:22,23)

“உம்முடைய கூலிக்காரனில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று கெஞ்சி வந்து நின்றவனுக்கு, கைக்கு மோதிரத்தை அணிவித்து, திரும்பவும் மகன் என்ற அந்தஸ்த்தைக் கொடுத்து, கனப்படுத்துகிறார். ஆம், திரும்பி வந்த இளைய குமாரனுக்காக கொழுத்தக் கன்றை அடித்து, பெரிய விருந்தையே ஏற்பாடு செய்கிறார். அந்த தகப்பனுக்கு எத்தனை பெரிய அன்பு!

ஆம், பரம தகப்பனை விட்டு நீங்கள் வெகுதூரம் சென்றாலும், மனந்திரும்பி வரும்போது, உங்களை உதறிதள்ளாமல், தம் அன்பின் கையிறுகளால் கட்டி அணைத்துக்கொள்கிறார். அநாதி சிநேகத்தால் நான் உன்னை சிநேகித்தேன். காருண்யத்தினால் உன்னை இழுத்துக்கொள்வேன் என்று அவருடைய நேச வார்த்தைகளால் உங்களை நயங்காட்டி அழைக்கிறார். ஒருவேளை நீங்கள் கர்த்தரை விட்டு தூரம் போயிருந்தீர்களென்றால், இந்த இளையக்குமாரனைப் போல திரும்பி வந்துவிடுங்கள். உங்கள்மேல் அன்பின் முத்திரையைப்பதித்து, உங்களை தன்னுடையவர்களாக்கிக்கொள்ள அவர் துடிக்கிறார்.

உன்னதப்பாட்டில், சூலமித்தியாள் தன் நேசரைப்பார்த்து, “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், புயத்தின்மேல் முத்திரையைப் போலவும் வைத்துக்கொள்ளும்” என்று கெஞ்சுகிறாள். (உன்னதப்பாட்டு 8:6) சிலர் தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக அவர்களுடைய உடல்களில் தனக்கு இஷ்டமானவர்களின் பெயர்களை பச்சைக் குத்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் உங்களை தம்முடைய பிள்ளையாகத் தெரிந்துக் கொண்டவர், உங்களை தன்னுடைய உள்ளங்கையிலே வரைந்து வைத்துள்ளார். (ஏசாயா 49:16) ஆகவே நீங்கள் எனக்கு யாருமில்லை, என்னிடம் அன்பு காட்ட ஒருவரும் இல்லை என்று புலம்பிக்கொண்டிருக்காமல், என் முகத்தை தன்னுடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடு ஓடுங்கள்.

பாதுகாப்பின் முத்திரை

என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீருற்றும், முத்தரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன்னதப்பாட்டு 4:12)

ஆம், நீங்கள் ஒரு முத்திரை போடப்பட்ட கிணறு. இந்த முத்திரையானது பாதுகாப்பிற்கு அடையாளமாய் இருக்கிறது. கர்த்தருடைய சித்தமில்லாமல் ஒருவரும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் நீங்கள் அவருடைய பாதுகாப்பின் வளையத்திற்குள் இருக்கிறீர்கள். நீ என்னுடையவன் என்று உங்களைத் தனக்குகென்று சொந்தம் பாராட்டிக்கொண்ட இயேசுகிறிஸ்து, உங்களுக்கு தீங்கு வர அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை. உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்று உங்களுக்கு ஒரு சேதமும் அணுகாதபடி உங்களை இரவும் பகலும் காத்துக்கொணடிருக்கிறார். உங்கள் குடும்பத்தை சுற்றிலும் இரத்தக்கோட்டைக்குள் மூடி வேலியடைத்திருக்கிறார். உங்களுடைய உடைமைகள் களவு போவதில்லை. உங்களுக்கு விரோதமாக ஒருவனும் கைப்போடுவதில்லை. ஆகவே நான் உன்னதமானவருடைய செட்டைகளின் மறைவின் நிழலில் இருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். அவரே உங்களுக்கு கேடகமும் மகா பெரிய பெலமுமாயிருக்கிறார்.

அதிகாரத்தின் முத்திரை

பிதாவாகிய தேவன் தமது சொந்த குமாரனின் மூலம் பிள்ளை என்கிற அன்பின் முத்திரையைப் போட்டு, என்னுடைய அனுமதி இல்லாமல் உன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று வைராக்கியத்தின் அடையாளமாக உங்கள் மீது பாதுகாப்பின் முத்திரையையும் தரித்து, எப்பொழுதும் உங்களுடனே இருக்கும்படி, அவர் அனுப்பிய திரியேகரில் ஒருவரான பரிசுத்த அவியானவரால் முத்திரை போடப்பட்டது எதற்காக தெரியுமா? உங்களுக்கு கட்டவும் கட்டவிழ்ப்பதற்கான அதிகாரத்தின் முத்திரையைக் கொடுப்பதற்காகத்தான்.
ஆம், கர்த்தர் உங்களை அதிகாரத்தின் முத்திரையாக பயன்படுத்தப்போகிறார். நீங்கள் எதன் மேல் அதிகாரத்தை செலுத்துகிறீர்களோ.. அது உங்களுக்கு கீழ்படியும். உங்களுடைய வாயின் வார்த்தைகளை கர்த்தர் கனப்படுத்தப்போகிறார். இந்த அதிகாரமானது திரியேக தேவனைக்குறித்ததான வெளிப்பாடு மிகவும் அவசியம். இந்த வெளிப்பாடானது தேவன் நமக்கு ஈவாகக்கொடுத்த சத்திய வார்த்தையிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. அதுவே உங்களுக்கு அதிகாரத்தைக் கொண்டுவருகிறது. ஆம், மத்தேயு 16ம் அதிகாரத்தில் இயேசு, தம்முடைய சீஷர்களை நோக்கி, நீங்கள் என்னை யார்? என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சற்றும் தாமதிக்காமல் பதிலளித்தார்.

இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வ தில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத்தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் (மத்தேயு 16:17&19)

மாம்சமும் இரத்தமும் உனக்கு இதை வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற பிதா உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால் இப்படி சொல்கிறாய் என்று சொல்லி, பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை பேதுருவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, பரலோகத்திற்கும் பூலோகத்திற்குமான அதிகாரத்தைக் கொடுக்கிறார். ஆகவே பேதுரு, அலங்கார வாசலண்டையில் உட்கார்ந்திருந்த முடவனிடம், என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மேல் உள்ள அதிகாரத்தில் அவனை எழுப்பிவிட்டான். பவுலின் அதிகாரம் நிறைந்த முதல் பிரசங்கத்தைக்கேட்டு மூவாயிரம் பேர் தன்னை கிறிஸ்துவுக்கென்று அர்பணித்தார்கள். அதுமட்டுமா.. பவுலின் நிழல் பட்டவர்கள் சொஸ்தமடைந்தார்கள். ஆம், தேவனைப்பற்றிய வெளிப்பாட்டைக்கொண்டவனுக்கு அதிகாரத்தின் முத்திரையைக் கொடுக்கிறார்.

தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய மகத்துவங்கள் என்ன? என்பதை அறிந்துக் கொள்ளும்போது, நீங்கள் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். நீங்கள் ஒருவரைப்பற்றி முழுவதுமாக அறிந்திருக்கும்போது, அந்த நபருடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறீர்கள். அதேபோலத்தான் தேவனோடு அதிக நேரம் ஜெபத்திலும் வேதவாசிப்பிலும், வேதத்தை தியானிப்பதிலும் நீங்கள் செலவிடும்போது, அவர் உங்களோடு சத்தியத்தின் மூலமாக உங்களுக்கு தன்னைக் குறித்த குணாதிசயங்களை வெளிப்பாடாக கொடுக்கிறார். தன்னுடைய நாமத்தின் மகத்துவத்தை கற்றுத்தருகிறார். மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

தானியேல் எனும் வாலிபன், ராஜாவின் கட்டளையை மீறி, இஸ்ரவேலுக்கு நேராக பலகணிகளைத்திறந்து வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி, ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் ஜெபம் பண்ணினான். இதனிமித்தம் அவனை சிங்கக்கெபியில் தூக்கிப்போடப்பட்டாலும், தானியேல் ஆராதிக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன் அவனைத் தப்புவித்து பாதுகாத்தார். இது சாதாரண காரியமல்ல… தேவன்மேல் இருந்த பக்தி வைராக்கியம். இதனால் கர்த்தருடைய ஆவியானவர் விசேஷ விதமாக தானியேல் இருந்தார். தானியேல் நாட்களில் வாழ்ந்த அனைத்து ராஜாக்களும் தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருக்கிறது என்று கண்டு, அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்தினார்கள். ஒருமுறை ராஜாவின் கனவையும் கூறி, அதற்கான அர்த்தத்தையும் தானியேல் வெளிப்படுத்தினார். காரணம், தானியேலும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் இடையேயான உறவு வலுவாயிருந்தது.
தினமும் அதிகாலையில் எழுந்து, தேவனைத் தேடுங்கள். நிச்சயம் அவர் உங்களோடே கூட இருந்து பயங்கரமான காரியங்களைச் செய்வார். அதற்காகத்தான் உங்கள்மேல் முத்திரையைப்பதித்து, அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்துவின் போர்சேவகனாய் வலம் வாருங்கள். கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்துவார்.