வாக்குத்தத்தச் செய்தி – நன்மை பெற்ற நாசரேத் – போதகர் ஆல்வின் தாமஸ் – Dec., 2018

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

ஆண்டவரும் இரட்கருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த தீர்க்கதரிசன செய்தியை படிப்பதற்கு நீங்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறீர்களோ.. அந்த அளவுக்கு நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காரணம் இந்த செய்தியானது வெளிப்பாடு நிறைந்தது. இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கர்த்தர் உங்களை எவ்வாறாக உயர்த்தி வைக்கப்போகிறார் என்பதைக் காண்பித்து, உங்களை குதுகலப்படுத்தப்போகிறது.

கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து உயர்த்தி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (1 சாமுவேல் 2:8)

நம்முடைய தேவன் ஒருவரையும் அற்பமாக எண்ணுவதில்லை. மாறாக, அவர் தூக்கி விடுகிறவராயிருக்கிறார். உலகமானது உங்களுக்கு போதிய ஞானமில்லை, நீங்கள் கடனாளி, வியாதிக்காரன், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதே கடினம் என்று ஏளனமாக பேசி உங்களை ஒதுக்கியிருக்கலாம். சோர்ந்து போகாதிருங்கள்.  இயேசுகிறிஸ்து முப்பது வயதைக் கடந்து ஊழியத்திற்கென்று வந்தபோது, ஜனங்கள் அவருடைய சொந்த ஊரின் நிமித்தம் அவரை குறைத்து மதிப்பிட்டார்கள். ஆம், இயேசுகிறிஸ்து நாசரேத் என்னும் ஊரிலிருந்து வந்தாரென்று சொன்னபோது யூதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரணம் நாசரேத், கலிலியேயா நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம்.

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப் பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். (யோவான் 1:45,46)

சீஷனாகிய பிலிப்பு, நாத்தான்வேல் என்பவரிடம் வந்து, நாம் வாசிக்கிற நியாயப்பிரமாணத்திலே தீர்க்கதரிசிகள் முன்மொழிந்த மேசியாவைக்கண்டேன். அவர் நாசரேத்தை சேர்ந்த யோசேப்பு என்வரின் மகன் என்று இயேசுகிறிஸ்துவை குறித்து, அறிமுகப்படுத்தும்போது, உடனடியாக நாத்தான்வேல்,”நாசரேத்திலிருந்து நன்மையா?” என்று ஆச்சரியப்பட்டு கேட்கிறார்.

நியாயப்பிரமாண புஸ்தகத்தில் அதாவது பழைய ஏற்பாட்டில் அநேக இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக இயேசு பிறந்த பெத்லகேம், ஊழியம் செய்த எருசலேம், எரிகோ, எகிப்து, தீரு சீதோன் என அநேக இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நாசரேத் ஊரைப்பற்றி எதுவும் எழுதப்படவில்லை. நியாயப்பிரமாண புஸ்தகத்தில் தேறின நாத்தான்வேல், இப்படியாக கேள்வி எழுப்புகிறார்.  ஆனால் இயேசு அந்த ஊரில்தான் வளர்க்கப்பட்டார். தனது இளமை காலங்கள் முழுவதையும் நாசரேத் ஊரிலே செலவிட்டார். ஆகவே நாசரேத் ஊரின் நிமித்தமாக இயேசுவின் மதிப்பானது கேள்விகேட்கப்பட்டது.

மதிப்பில்லாத நாசரேத் ஊரானது, இயேசுகிறிஸ்துவினிமித்தம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆகவே எனக்கன்பானவர்களே, நான் எளிய குடும்பத்தில் பிறந்து விட்டேன்,  எனக்கு பணம் இல்லை, என்னால் வாழ்கையில் உயரமுடியுமா? என் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது, எனக்கு யார் உதவி செய்வார்கள் என்று கவலைபட்டு கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கலங்கத்தேவையேயில்லை. இயேசு உங்களை உயர்த்த போதுமானவராயிருக்கிறார். ஆகவே நீங்கள் தங்க தட்டிலும், சில்வர் ஸ்பூனிலும் சாப்பிட்டிருக்க வேண்டும் என்றல்ல.. கிறிஸ்து உங்களோடு இருந்தாலே போதும் நீங்கள் விலைமதிப்புள்ளவர்களாய் மாறிவிடுவீர்கள்.

நீங்கள் மறக்கப்படுவதில்லை

நாசரேத் ஊரானது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே அடைப்பெயராக மாற்றப்பட்டது. ஆம் இயேசுவே நான் நாசரேத்தைச் சேர்ந்தவன் என்று தம் வாயினால் கூறியிருக்கிறார். கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட யூதர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சவுல் என்பவன், தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து வந்த பேரொளி தாக்கி கீழே விழுந்துவிட்டார். அப்பொழுது சவுலே, சவுலே ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்? என்ற கேள்வி வானத்திலிருந்து கேட்கப்பட்டது. நீ யார்? என்று சவுல் கேட்க, அந்த சத்தமானது, நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசுநானே என்று பதிலளித்தது.

நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது; சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றார் ( அப். 22:8)

தீர்க்கதரிசிகளும் நாசரேத்தை மறந்து போனார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தான் நசரேயன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டார். இயேசு இறந்தபிறகு,  அவருடைய கல்லறைக்கு சுகந்த வர்க்கமிடும்படி சென்ற மூன்று பெண்களைப்பார்த்து, வெள்யைங்கி தரித்த தூதன், நசரேயேனாகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்றான். (மாற்கு 16:6) இயேசுகிறிஸ்துவை அறைந்த சிலுவை மரத்தின்மேலே “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா” என்ற வாசகத்தை எழுதினார்கள். (யோவான் 19:19) அதுமட்டுமல்லாமல், பிசாசுகளும் கூட இயேசு கிறிஸ்துவை நசரேயனாகிய இயேசு என்றே அழைத்தன. (லூக்கா 4:34) பேதுருவும் யோவானும் அலங்கார வாசலண்டையில் பிச்சைஎடுத்துக்கொண்டிருந்த முடவனை, நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னதும், அவன் எழுந்து நடந்தான். (அப்போஸ்தலர் 3:6) இயேசுவின் பெயருக்கு முன்னால் எல்லோராலும் மறக்கப்பட்ட நாசரேத் ஊரை ஞாபகப்படுத்தும்படியாக நசரேயனாகிய இயேசு என்று இயேசுகிறிஸ்து அழைக்கப்பட்டார்.

சிறுவனாகிய தாவீதை, பெற்றெடுத்த தகப்பனே மறந்து போய்விட்டார். சாமுவேல் தீர்க்கதரிசி தைலக்கொம்பை எடுத்து அபிஷேகம் பண்ணுவதற்காக வந்தபோது, உன் பிள்ளைகள் இவ்வளவுதானா? என்று கேட்டபிறகு, எல்லோருக்கும் இளைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று தகப்பனாகிய ஈசாய் கூறுகிறார். சகோதரராலும், தகப்பனாலும் மறக்கப்பட்ட தாவீதை கர்த்தர் உயர்த்தி ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார். எவ்வளவு பெரிய ஆச்சரியம். ஆம், வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். அவர் எளியவர்களை மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கச் செய்கிறார். ஆகவே பிரியமானவர்களே, என் குடும்பத்தினரால், உறவினர்களால் மறக்கப்பட்டேன் என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களை கர்த்தர் மறக்கவில்லை. உங்களை மறந்தவர்கள் கண்களுக்கு முன்பாக உங்களை உயர்த்தப்போகிறார்.

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை (சங்கீதம் 9:18)

நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டீர்கள்

இயேசுகிறிஸ்து தாம் வளருவதற்கு நாசரேத்தை தெரிந்து கொண்டார். லூக்கா 2:51,52ல் இயேசு நாசரேத்தூரில் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். இப்போது தம்முடைய வல்லமையுள்ள நாமத்தை மகிமைப்படுத்த உங்களை தெரிந்துக்கொண்டார். ஆம், நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன் என்றும், நீங்கள் கனிக்கொடுக்கும்படிக்கு உங்களை ஏற்படுத்தினேன் (யோவான் 15:16) என்று  கூறுகிறார். ஆகவே உங்களை எதற்காக தெரிந்து கொண்டாரோ, அந்த திட்டத்தை உங்கள் மூலமாய் நிறைவேற்றி முடிப்பார்.  39 புஸ்தகத்தில் குறிப்பிடப்படாத நாசரேத்தை தாம் வளர்வதற்கு தெரிந்து கொண்டதைப்போல, தாம் மகிமைப்படுவதற்கு உங்களைத் தெரிந்து கொண்டார்.

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவை களையும் இல்லாதவைகளையும்  தேவன் தெரிந்து கொண்டார். (1 கொரிந்தியர் 1:27,28)

தேவனுடைய தெரிந்துக்கொள்ளுதலை புரிந்துக்கொள்ளவே முடியாது. அது உங்களுக்கும் எனக்கும் புரியாத புதிர். காரணம் அவருடைய அனந்த ஞானத்தை ஒருவராலும் விளங்கிக்கொள்ள முடியாது.

ஒரு கம்பெனியில் வேலை செய்ய தெரிந்த திறமையான, ஞானமுள்ள ஆட்களையே வேலைக்கு எடுப்பார்கள். ஆனால், தேவாதி தேவனின் வேலையை செய்வதற்கு ஒன்றுக்கும் உதவாத, அற்பமாய் எண்ணப்பட்ட உங்களையும் என்னையும் தேவன் தெரிந்துக்கொண்டார். எவ்வளவு பெரிய பாக்கியம். ஆகவே நான் பலவீனமானவன், பைத்தியம், அற்பமானவன் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால், சந்தோஷப்படுங்கள். கர்த்தர் உங்களைத்தான் தெரிந்துகொண்டார்.

வேதாகமத்தில், எல்கானாவின் மனைவியாகிய அன்னாளுக்கு குழந்தை இல்லாததினால் அவளுடைய சக்காளத்தி பென்னினாளால் மிகவும் அற்பமாக எண்ணப்பட்டாள். சிறியவள் என்று அற்பமாக எண்ணப்பட்ட அன்னாளை கர்த்தர் தெரிந்துக்கொண்டு, சாமுவேலை பரிசாக கொடுத்தார். பென்னினாளுக்கு பிறந்தது குழந்தைகள்தான். ஆனால் கர்த்தர் அன்னாளுக்கு, இஸ்ரவேல் என்ற முழு தேசத்தையும் விசாரிக்கிற கர்த்தருடைய தீர்க்கதரிசியைக் கொடுத்ததுமல்லாமல், கூட ஐந்து பிள்ளைகளை சேர்த்துக்கொடுத்தார்.  ஆம், அவர் சிறியவனுக்கும், எளியவனுக்கும் நீதி செய்வதில் வைராக்கியம் மிகுந்தவர்.

நியாயாதிபதிகள் 11ம் அதிகாரத்தில் யெப்தா என்ற ஒரு மனுஷனைக்குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் ஒரு வேசியின் மகன். ஆகவே அவனுடைய தகப்பனின் புத்திரர்கள் அவனை ஒதுக்கி வைத்திருந்தார்கள். பட்டணத்தை விட்டே வெளியே வெளியேற்றினார்கள். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டான். ஆனால் அதற்காக யெப்தா சோர்ந்து போகவில்லை. மாறாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டான். காலங்கள் உருண்டோடின. யெப்தாவை வேண்டாம் என்று விரட்டினவர்கள், தங்களுக்கு ஆபத்து நேரிட்டபோது, யெப்தாவை தங்களுக்கு தலைவனாக ஏற்படுத்திக் கொண்டார்கள். பின்பு யெப்தா, இஸ்ரவேல் ஜனத்தை நியாயம் விசாரிக்கும் நியாயாதிபதியாய் கர்த்தர் மாற்றினார். உங்களின் கடந்த காலம் மோசமானதாக இருக்கலாம், ஆனால், உங்கள் நிகழ்காலத்தை கர்த்தர் பொறுப் பெடுத்திருக்கிறபடியால், உங்களை கன்மலையின் மேல் உயர்த்துவார்.

மோசே ஒரு கொலைகாரன்தான். ஆனாலும் கர்த்தர் அவனோடு முகமுகமாய் பேசினார். இலட்சணக்கான இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படி தலைவனாக ஏற்படுத்தினார். யாக்கோபு ஏமாற்றி ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டவனாயிருந்தாலும், சர்வ வல்லமை யுள்ளவர் அவனோடு உடன்படிக்கை பண்ணினார். அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்து, அவரை யாரென்றே தெரியாதென்று சத்தியம் பண்ணினவர்தான், ஆனால் அவனுடைய முதல் பிரசங்கத்திலேயே, மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட உங்களை கர்த்தர் உயர்த்துவது நிச்சயம்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே… ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், இயேசு நாசரேத்தை தெரிந்து கொண்டு, அங்கே வாசம் பண்ணினார். ஆனால், அந்த ஊரார் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இயேசு ஊழியம் செய்து வந்த நாட்களில், நாசரேத்தூரில் உள்ள ஜெப ஆலயத்தில் பிரசங்கம் பண்ணும்போது, அவருடைய தெய்வத் தன்மையைக்குறித்து பேசினார்.

ஜெப ஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்படிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்கு கொண்டு போனார்கள். (லூக்கா 4:28,29)

இயேசு, தாம் மேசியா என்று சொன்னபோது, அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும் அவருடைய வல்லமையைக்குறித்து சந்தேகப்பட்டார்கள்.

தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு; இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாம் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல டைந்தார்கள். அவர்களுடைய அவிசுவாசத்தினி மித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. (மத்தேயு 13:54&58)

சர்வ வல்லமையுள்ள தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினார். வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியர்களாகவும், காணியாட்சிக்கு புறம்பானவர்களாகவும், நம்பிக்கையில்லாதவர்களாகவும், தேவனற்றவர்களாகவும் இருந்த உங்களையும் என்னையும் மீட்கும்படியாக பூமியில் மனிதனாய் அவதரித்தார். இப்படிப்பட்ட நல்ல தெய்வத்தின் மேல் முழுவதுமாக சார்ந்துக்கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களை தலையை உயர்த்தி, உங்களை பிரபுக்களோடும் இராஜாக்களோடும் அமரச் செய்து, மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கச் செய்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *